Enter your Email Address to subscribe to our newsletters

நாக்பூர், 24 நவம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
இதற்கான புதிய சட்டத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
இதுதொடர்பாக பி. ராதிகா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடமிருந்து மற்றொரு அறிக்கை அரசுக்குக் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையில் தேர்வுக் கட்டணம் தொடர்பாக முக்கியமான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் தேர்வின் மீதான பொறுப்புணர்வும் தீவிரத்தன்மையும் அதிகரிக்கும் எனக் குழு கருதுவதாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தேர்வில் உண்மையாகப் பங்கேற்கும் தேர்வர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்றும், தேர்வு நடைமுறையில் ஒழுங்கையும் பொறுப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஏற்கெனவே இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் கூடுதல் கடுமையான விதிமுறைகளைச் சேர்க்க வேண்டும் எனக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் பட்னாவிஸ் தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரைகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், முடிந்தவரை தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி, அதே கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) தலைவரான சரத் பவாரின் அரசியல் ஓய்வு குறித்த விவாதங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
சரத் பவார் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று குறிப்பிட்ட அவர், தற்போதும் பவார் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
அவரை நீண்டகாலமாகக் கவனித்து வருவதாகவும், தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபாடு காட்டும் ஒருவரின் அரசியல் ஓய்வு குறித்து இப்போது விவாதிப்பது பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், தனது வாழ்நாள் முழுவதும் சரத் பவார் அரசியல் மற்றும் பொதுப்பணிகளில் இருந்து விலகமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V