Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்பூர், 24 நவம்பர் (ஹி.ச.)
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் கிரோடி லால் மீனா, தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மட்டும் பொறுப்பல்ல என்றும், தானும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாயத்து தேர்தல்களில் ராஜஸ்தான் மக்கள் பாஜகவுக்கு எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை என்பதை ஏற்கெனவே ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
இருப்பினும், தேர்தல் முடிவுகளால் கட்சியினர் மனம் தளரவில்லை என்றும், தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக முன்பு தான் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சருக்கு எதிரானவை அல்ல என்றும், அவரது தலைமையின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சவாய் மாதோபூர் பகுதியில் மட்டும் சுமார் ரூ.850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சாலை வசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களும் பொதுமக்களும் அங்கீகரிப்பதாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
தேர்தல் தோல்விக்கு முதலமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது சரியல்ல என்று தெரிவித்த கிரோடி லால் மீனா, தனது தொகுதியிலும் அரசின் சார்பில் பல்வேறு வசதிகளும் திட்டங்களும் வழங்கப்பட்டிருந்தபோதிலும் வெற்றியைப் பெற முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்தத் தோல்வி ஒட்டுமொத்தமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, குறைகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சி பெற்று வெற்றியை நோக்கிப் பயணிப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பயணம் செய்து மக்களைச் சந்தித்து வந்ததாகவும், தேர்தல் பிரசாரத்தின்போதுகூட இத்தகைய முடிவைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்படும் பனிப்பொழிவு எவ்வாறு எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்துமோ, அதுபோலவே இந்தத் தேர்தல் முடிவுகளும் தங்களுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V