Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 24 நவம்பர் (ஹி.ச.)
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) எனப்படும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரைப்பேட்டை - வாலாஜாபேட்டை நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியில் இந்த வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை - பெங்களூரு இடையிலான பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வேகத்தைக் குறைத்து, குறிப்பிட்ட பாதையில் நின்று கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், புதிய MLFF தொழில்நுட்பத்தில் வாகனங்கள் சுங்கக் கட்டணப் பகுதியைக் கடக்கும்போது நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இதற்காக சுங்கச்சாவடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேல்நிலை கேன்ட்ரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி வாகனப் பதிவு எண் அடையாளம் காணும் கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் ரீடர்கள் மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
தொடர்ந்து, வாகனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது சுங்கச்சாவடி இதுவாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தில் பரனூர் சுங்கச்சாவடியிலும், அதன் பின்னர் நெமிலி சுங்கச்சாவடியிலும் இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சுங்கச்சாவடியின் வழியாக அதிக அளவில் வாகனங்கள் பயணித்து வருகின்றன.
அக்டோபர் 2026-க்கான அதிகாரப்பூர்வ போக்குவரத்து அறிக்கையின்படி, அந்த மாதத்தில் மட்டும் 9,81,450 வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்துள்ளன. இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 31,660 வாகனங்கள் பயணித்துள்ளன.
புதிய வசதியை இடையூறின்றிப் பயன்படுத்த வாகன ஓட்டிகள் தங்களது ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான பண இருப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்புத் தொகை இல்லாதபட்சத்தில் மின்னணு அறிவிப்புகள் அனுப்பப்பட வாய்ப்புள்ளது.இந்தத் தடையற்ற கட்டண வசூல் முறையால் பயண நேரம் குறைவதுடன், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் சுங்கக் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுங்கச்சாவடி செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V