ஜம்மு காஷ்மீரில் 65 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் – 10 ஆயிரம் அடி உயர மலைப்பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்கள் அமைப்பு!
காஷ்மீர், 25 நவம்பர் (ஹி.ச.) ஜம்மு காஷ்மீரில் சுமார் 65 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் சுமார் 55 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன்
தீவிரவாதிகள்


காஷ்மீர், 25 நவம்பர் (ஹி.ச.)

ஜம்மு காஷ்மீரில் சுமார் 65 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் சுமார் 55 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ள நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளைக் குறிவைத்து பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்காக ஜம்மு காஷ்மீரின் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல முகாம்கள் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ளன. ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இம்முகாம்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் புதிய பாதுகாப்பு உத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல் முகாம் 2025 ஜூலை மாதம் ஸ்ரீநகரின் ஃபகிர் குஜ்ரி பகுதியில் அமைக்கப்பட்டது.

மேலும், பயங்கரவாதிகள் வனப்பகுதிகள், மலைக்குகைகள் மற்றும் ஆடு மேய்ப்பவர்கள் தங்குவதற்காகப் பயன்படுத்தும் மண் மற்றும் கற்களால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகளில் (டோக்) பதுங்கியிருக்கலாம் எனப் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இவர்கள் வழக்கமான தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதால், அவர்களைக் கண்டறிவதில் சவால்கள் நீடிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 6 உள்ளூர் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், புதிதாக உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேருவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பை ஒழிப்பதில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆதரவு வலையமைப்புகளைக் கண்டறிந்து முறியடிப்பதில் பாதுகாப்புப் படையினர் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam