Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) சர்வதேசத் தலைவர் அலோக் குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அலோக் குமார்,
இந்த விவகாரத்தில் இரண்டு முக்கியமான அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்குச் சொந்தமானதாகவும், அங்கு அவருக்காகப் புகழ்பெற்ற கோயிலும், பெரிய தீபத்தூணும் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கார்த்திகை பௌர்ணமி நாளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததாகவும், அதற்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து இந்து சமூகத்தினர் நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை என்பதை உறுதிப்படுத்தி அதற்கு அனுமதி வழங்கியதாக அலோக் குமார் தெரிவித்தார்.
இந்த உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இதையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டபோது உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் முந்தைய உத்தரவை உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில், கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு தீபம் ஏற்ற அனுமதிக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் என்றும், முழக்கங்கள் எழுப்பவோ போராட்டங்களில் ஈடுபடவோ கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய அரசே அதனைப் பின்பற்றத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்த நடவடிக்கை இந்துக்களின் மத உணர்வுகள், பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு உரிமைகளைப் புறக்கணிப்பதாக உள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றதாகவும், இந்து சமூகத்தினர் தங்களது மத நம்பிக்கைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் இந்த விவகாரத்தை எதிர்கொள்ளப் போவதாகவும், குடியரசுத் தலைவரிடமும் முறையிட உள்ளதாகவும் கூறினார்.
மேலும், உச்ச நீதிமன்றம் மறுஆய்வு மனுவை இதுவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவே நடைமுறையில் இருப்பதாக அலோக் குமார் குறிப்பிட்டார்.
நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலும் அந்தத் தூணில் தீபம் ஏற்றுவது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்துடன் வாழ இந்துக்கள் விரும்பினாலும், அதற்காகத் தங்களது மத நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V