Enter your Email Address to subscribe to our newsletters

பிவாண்டி, 25 நவம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்டதாகக் கூறப்படும் உணவு நச்சுத்தன்மை பாதிப்பால், ஐஜிஎம் (IGM) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மாதவி பந்தாரே கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, எங்கள் மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்பு மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட 48 பேரில் 22 ஆண்கள், 16 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 7 சிறுமிகள் அடங்குவர். இவர்களில் இரண்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் உள்ளார்.
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் அனைவரும் ஒரே கடையில் ஷவர்மா சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட அந்தக் கடையில் ஷவர்மா சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவர்களின் வாந்தி மற்றும் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேதியியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், தொற்றுக்கான காரணத்தையும், அதற்குக் காரணமான நுண்ணுயிரிகளையும் கண்டறிய பர்வரா மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட கடையை மூட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) கூடுதல் ஆணையரிடமும் நான் நேரடியாகப் பேசியுள்ளேன். அவரும் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று ஷவர்மா சாப்பிட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மீண்டும் மற்றொரு கடையில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஷவர்மா விற்பனை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்பது குறித்து ஆலோசித்துள்ளோம்.
தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். முடிவுகள் கிடைத்த பிறகு பாதிப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சிவில் சர்ஜன், துணை இயக்குநர் மற்றும் தானே மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் மூத்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
Hindusthan Samachar / LOGESHWARI V