Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 25 நவம்பர் (ஹி.ச.)
1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், விஜய் திவஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'ஹானர் ரன் ஜெய்ப்பூர் 2026' என்ற சிறப்பு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் சப்த சக்தி கமாண்டின் தலைமைப் பணியாளர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். சேகாவத் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓட்டப்பந்தயம் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
1971-ம் ஆண்டு போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் மட்டுமின்றி, அதற்கு முன்பும் பின்பும் நடைபெற்ற பல்வேறு போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் இந்த ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது உயிரையும் தியாகம் செய்த துணிச்சலான ராணுவ வீரர்களை நினைவுகூர்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஓட்டப்பந்தயத்தில் பொதுமக்கள், அரசு பிரதிநிதிகள், இந்திய ராணுவத்தினர் மற்றும் ஜெய்ப்பூர் நகர மக்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.
சீருடை அணிந்து நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடன் இணைந்தும் ஓடுவதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும்.
வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள 'ஹானர் ரன்' நிகழ்ச்சியில் அனைவரும் முன்பதிவு செய்து பங்கேற்க வேண்டும்.
ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகத்தில் இருந்து தொடங்கும் ஓட்டப்பந்தயம், ஜவஹர் சர்க்கிள் வரை நடைபெற உள்ளது. இதில் 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 3 கி.மீ. தூரங்களுக்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் 1.5 முதல் 2 கி.மீ. வரையிலான சிறப்பு ஓட்டப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கோ அல்லது பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கோ நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், சமூக நலப் பணிகளுக்கும் பங்களிக்க முடியும்.
இந்த நல்ல முயற்சியில் அனைவரும் பங்கேற்கலாம் என்று லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். சேகாவத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V