இறக்குமதியைக் குறைக்க ரூ.11,000 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரின் அறிவிப்பு!
புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அ
Aswini vaishnav


புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தின் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி முதலீட்டில் புதிய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்தியா உள்கட்டமைப்புத் துறையில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், பல்வேறு வகையான கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு இயந்திரங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது இந்தியாவில் இத்தகைய இயந்திரங்களுக்கான சந்தை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தேவைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.

இந்த இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எட்டு ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் துளையிடும் இயந்திரங்கள், சாலைக்கு வெளியே பயன்படுத்தப்படும் கனரக லாரிகள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் உள்ளிட்ட ஏழு வகையான உபகரணங்கள் படிப்படியாக உள்ளடக்கப்படும். இதற்காக மொத்தம் ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னைக்கு அருகே அமைந்துள்ள தமிழகத்தின் காமராஜர் துறைமுகத்தில் (எண்ணூர் துறைமுகம்) இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் நாட்டின் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து 2.8 கோடி TEU-வைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 3.2 கோடி, 3.5 கோடி என உயர்ந்து, எதிர்காலத்தில் 4 கோடி TEU-வை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறந்த உள்நாட்டு போக்குவரத்து இணைப்புகளைக் கொண்ட காமராஜர் துறைமுகத்தில் புதிய சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் திட்டம் பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் பின்னர் ஒப்படைத்தல் (DBFOT) என்ற அடிப்படையில் சுமார் ரூ.4,288 கோடி முதலீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

புதிய முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் TEU சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், மிகப்பெரிய சரக்குக் கப்பல்களையும் கையாளும் வசதி ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக, 400 மீட்டர் நீளம் கொண்டதும், அதிகபட்சமாக 24,000 TEU சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லக்கூடியதுமான பிரம்மாண்டமான கப்பல்களையும் இந்த முனையத்தில் கையாள முடியும்.

இதன் மூலம் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் திறன் அதிகரிப்பதுடன், தமிழகத்தின் கடல்சார் வர்த்தகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பு உருவாகும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V