திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டில் மதுரை கலெக்டர் விளக்கம்.
மதுரை, 25 நவம்பர் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 20-
Deepam


மதுரை, 25 நவம்பர் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த 20-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், 21-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் காவல் ஆணையருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, கோயில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்களுக்கு மிகாமல் கொண்ட குழுவினர் மூலம் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோயில் மரபுகளின்படி விளக்கேற்றும் நடைமுறையைச் செயல் அலுவலர் தீர்மானிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரின் உதவி தேவையில்லை என்றும், தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்துக்குக் கிடைத்தது.

இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 24-ம் தேதி காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை திருப்பரங்குன்றத்துக்குச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறை ஆணையருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.

மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் வந்து தீபம் ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தக் குழுவினர் வரவில்லை என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கான அதிகாரம் பெற்ற நபர்களின் பெயர்களை தேவஸ்தானம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட வழிகளில் நினைவூட்டல் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் பரிந்துரைக்கப்படாததால், கோயில் அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்ததாக ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு கார்த்திகை திருநாளிலும் வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயில் மரபுகளின்படி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு தான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தனது அதிகார வரம்புக்குள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் நிஷாந்த் கிருஷ்ணா தனது 17 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V