Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன் 25 நவம்பர் (ஹி.ச.)
உத்தரகண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாயப் தாசில்தார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்துகொண்டு, தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று தேர்வானவர்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சிறப்பான நாளில் தேர்வானவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் வெற்றிக்குத் துணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
மொத்தம் 36 பேர் நாயப் தாசில்தார் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 26 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தேர்வானவர்களில் 13 பேர் பெண்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ள இளம் பெண்கள், மாநிலத்தில் அரசு வேலைக்காகத் தயாராகி வரும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பணி நியமன ஆணைகளைப் பெறுவதுடன், மக்கள் சேவையாற்றும் மிகப்பெரிய பொறுப்பையும் தேர்வானவர்கள் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களைத் தொடர்ந்து நிரப்புவதே தனது அரசின் நோக்கம் என்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அனைத்து அரசுப் பணியிடங்களையும் முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார்.
ஆட்சேர்ப்புப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதுடன், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தகுதி, திறமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், எந்தவொரு தேர்வருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V