Enter your Email Address to subscribe to our newsletters

ஜோலார்பேட்டை, 26 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மகன் சிங்காரவேலு. முன்னாள் ராணுவ வீரரான இவர், தனது நண்பரும் பந்தாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலருமான சசிகுமார் என்பவருடன் பச்சூர் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, காரில் மீண்டும் நாட்றம்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏரிக்கொடி பகுதியில் வந்துகொண்டிருந்த ஐந்து இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர் சிங்காரவேலுவின் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தகராறாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஐந்து இளைஞர்களும் முன்னாள் ராணுவ வீரரின் காரை அடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து, அதனைக்காட்டி முன்னாள் ராணுவ வீரர் சிங்காரவேலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் ஆகிய இருவரின் கழுத்தில் வைத்து மீண்டும் சரக்கு அடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த சட்டைப் பையில் வெறும் 200 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், அந்தப் பணத்தைப் பறித்துக்கொண்டு ஐந்து இளைஞர்களும் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாட்றம்பள்ளி போலீசார், விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷ், மேகநாதன், அபிஷேக், கவியரசன், மேகநாதன், உள்ளிட்ட ஐந்து இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தகராறில் ஈடுபட்ட ஆகாஷின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அரசு அலுவலரான கிராம நிர்வாக அலுவலரிடமே பீர் பாட்டிலைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J