Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 26 நவம்பர் (ஹி.ச.)
அரசியல் சாசனத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
'சம்விதான் ரக்ஷா மார்ச்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பேரணி, டேங்க் பண்ட் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி, நெக்லஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை சென்றது. இதில் முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமை தாங்கி பங்கேற்றார்.
பேரணியின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, நாட்டில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சதி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தாங்கள் ஆட்சியாளர்கள் அல்ல; மக்களின் சேவகர்கள் என்று குறிப்பிட்டார்.
சர்வாதிகார ஆட்சியாளர்கள் வேண்டுமா அல்லது மக்களுக்காக போராடுபவர்கள் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், ஜனநாயக அமைப்புகளையும் அரசியல் சாசனத்தின் மாண்புகளையும் பாதுகாக்க அனைவரும் இந்த இயக்கத்தில் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ்குமார் கவுட், துணை முதல்-அமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள் பொன்னம் பிரபாகர், வாகட்டி ஸ்ரீஹரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA