Enter your Email Address to subscribe to our newsletters

சித்திப்பேட்டை, 26 நவம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் நடத்த வேண்டிய மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை தனியார் பள்ளியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அரசு பள்ளியில் நடத்த வேண்டிய அறிவியல் கண்காட்சியை அரசு பள்ளியிலேயே நடத்தக்கூட அரசுக்கு வசதி இல்லையா? என கேள்வி எழுப்பினார். முந்தைய ஆட்சிக்காலத்தில் சித்திப்பேட்டை மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தேசிய அளவிலான விருதுகளை பெற்றதாகவும், ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை அலட்சியப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், சித்திப்பேட்டை மாவட்டத்தின் மீது உள்ள பாரபட்சம் காரணமாகவே அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.
மாணவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனம் காட்டப்படுவதாக கூறிய அவர், சித்திப்பேட்டையில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை இதுவரை ஏன் செயல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
கல்வியாண்டு பாதி முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு இதுவரை ஒரே ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஹரீஷ் ராவ், மீதமுள்ள சீருடைகளை உடனடியாக வழங்குவதுடன், காலை உணவுத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA