தனியார் துறை, உயர்நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் -அரசியலமைப்பு தினத்தில் அன்புமணி கோரிக்கை
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியை முன்னிட்டு, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய அரசின
Anbhumani


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியை முன்னிட்டு, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்திய அரசின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவின் பங்களிப்பால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்புகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும் என்றும், இத்தகைய சிறப்புமிக்க ஆவணத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழுவினருக்கும், அதனை ஏற்றுக்கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளையும் உறுதிப்படுத்துவதில் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உரிமைகள் மக்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் நடைமுறை மற்றும் 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பு ஆகியவை சமூகநீதியை முழுமையாகச் செயல்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கிரீமிலேயர் நடைமுறை மற்றும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவதுடன், தனியார் துறை மற்றும் உயர்நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும், அனைவருக்கும் சம உரிமை மற்றும் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் அறவழியிலும் அரசியல் வழியிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என அரசியலமைப்பு தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V