வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்பு -உதகையில் கோலாகலமாக நடைபெற்ற கேக் கலவை விழா
நீலகிரி, 26 நவம்பர் (ஹி.ச.) 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் தானியங்கள், உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி கேக் தயாரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின
Cake


நீலகிரி, 26 நவம்பர் (ஹி.ச.)

17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் தானியங்கள், உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி கேக் தயாரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றினர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரும், உதகையில் இந்தக் கலாச்சார வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக உதகையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் கேக் தயாரிப்புக்கான பழக்கலவை விழா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கேக் மிக்சிங் விழா நடைபெற்றது.

இதில் விடுதியில் தங்கியிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, பேரீச்சம்பழம், வால்நட் உள்ளிட்ட உலர் பழங்களுடன் பல்வேறு வாசனைப் பொருட்கள் மற்றும் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 65 கிலோ எடையிலான பழங்கள் மற்றும் இதர மூலப்பொருட்களைக் கொண்டு கேக் தயாரிப்பதற்கான கலவையை உருவாக்கினர்.

தொடர்ந்து இந்தப் பழக்கலவை சுமார் 45 முதல் 50 நாட்கள் வரை பாதுகாப்பாக ஊறவைக்கப்படும். பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக அதனை வெளியே எடுத்து, மைதா, முட்டை உள்ளிட்ட தேவையான பொருட்களுடன் சேர்த்து சுவையான கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படும்.

தயாரிக்கப்படும் கேக்குகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே உதகையில் களைகட்டியுள்ள இந்தப் பாரம்பரிய கேக் மிக்சிங் விழா, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளதாக அவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V