Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
விவசாயிகள் அமைப்புகள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், புதுடெல்லி மாவட்டத்தில் அமலில் உள்ள தடை உத்தரவைச் சுட்டிக்காட்டி, அனுமதியின்றி கூட்டம் கூடவோ, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவோ கூடாது என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் பிற ஆர்வலர்கள் காளி பாரியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கோரி இதுவரை எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை என்றும், காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 163-ன் கீழ் புதுடெல்லி மாவட்டத்தில் தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் கூடுவது, ஊர்வலம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் செய்வது, உரையாற்றுவது, கோஷமிடுவது மற்றும் தர்ணாவில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள அமைப்பினரும் நடைமுறையில் உள்ள உத்தரவுகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றும், தடையை மீறிச் செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V