Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 26 நவம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்திற்கு உட்பட்ட 69 சாத்தனூர் ஊராட்சியின் ஆரியங்கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது மனைவி ஆரோக்கிய மெர்சி. இந்தத் தம்பதிக்கு ஹெலன், ஜோனல், ஆதிரா என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டிற்கு எதிரே சொந்தமாக சுமார் 150 குழி விவசாய நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்குச் செல்லும் பொதுப்பாதையை அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வம் என்பவர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளதாக இன்பராஜ் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்துவதால் வீட்டிற்குச் செல்வதற்கும், விவசாய நிலங்களுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதற்கும் கடும் சிரமம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
குறிப்பாக, விவசாயப் பணிகளுக்காக வரும் வாகனங்கள் பாதையைக் கடந்து செல்ல முடியாத நிலை கடந்த சில மாதங்களாக நீடித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என இன்பராஜ் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த இன்பராஜ், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தங்களது வீட்டிற்குச் செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, விவசாயப் பணிகளுக்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V