40 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சொத்தை மீட்டோம் -ஷோயப் நூரானி பேட்டி
மும்பை, 26 நவம்பர் (ஹி.ச.) மும்பையில் உள்ள ஹாஜி இஸ்மாயில் ஹாஜி ஹபீப் முஸாஃபிர்கானா அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து தொடர்பாக 40 ஆண்டுகளாகச் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும், 2011ஆம் ஆண்டு சைஃபி புர்ஹானி அப்லிப்ட்மென்ட் டிரஸ்ட் (SBUT) உடன் சில ந
Muslim


மும்பை, 26 நவம்பர் (ஹி.ச.)

மும்பையில் உள்ள ஹாஜி இஸ்மாயில் ஹாஜி ஹபீப் முஸாஃபிர்கானா அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து தொடர்பாக 40 ஆண்டுகளாகச் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும், 2011ஆம் ஆண்டு சைஃபி புர்ஹானி அப்லிப்ட்மென்ட் டிரஸ்ட் (SBUT) உடன் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த அறக்கட்டளையின் நிர்வாகி ஷோயப் நூரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

சொத்தை மீட்பதற்காக நீண்டகாலமாக நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் சொத்துகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அறநிலைய ஆணையரிடம் முறையிட்டதாகவும், அதன் அடிப்படையில் ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு அந்தச் சொத்தை எதிரி நாட்டுச் சொத்து (Enemy Property) என அறிவித்ததாகவும், அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய பின்னர் அந்த வகைப்பாடு நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு, தடா (TADA) நீதிமன்றம் அந்தச் சொத்தை முடக்கியதாகவும், அப்போது சிறையில் இருந்தபடியே வழக்கை எதிர்கொண்டு சொத்தை மீட்டதாகவும் ஷோயப் நூரானி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கட்டடத்தின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

சொத்தை மீட்டபோது அதன் நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், பின்னர் அங்கு மதரஸா செயல்படத் தொடங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அந்த இடத்தின் உரிமை மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து பொதுமக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக SBUT தங்களை அணுகியதாகவும், 2011ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அந்த ஒப்பந்தத்தின்படி, பிரார்த்தனைக் கூடத்தை விற்பனை செய்யாமல், அதை மறுகட்டமைத்து மீண்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்ததாகத் தெரிவித்தார். இதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அந்தச் சொத்து 2003ஆம் ஆண்டு முதல் வக்ஃப் வாரியப் பதிவில் இடம்பெற்றிருந்த விவகாரம் பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து வக்ஃப் வாரியம் விசாரணை நடத்தியதாகவும் கூறினார்.

அந்தச் சொத்து வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது அல்ல என வாரியம் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சொத்து உரிமை மற்றும் பிரார்த்தனைக் கூடம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்றும் ஷோயப் நூரானி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V