Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 26 நவம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 கிராமங்களில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் மருத்துவத் துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக இப்பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூந்தமல்லி வட்டாரத்தில் நாள்தோறும் சராசரியாக 10 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக மருத்துவத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவத் துறை துணை இயக்குநர் பிரபாகரன் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் பிரதிபா, மாவட்ட மலேரியா அலுவலர் நீலமேகன், பூச்சியியல் வல்லுநர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேங்கியுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்தல், அவற்றைக் கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இந்தப் பணிகளின்போது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
பாதிப்பின் தன்மையைப் பொறுத்து தேவையானவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நோய் தடுப்புப் பணிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளர்களும் பங்கேற்று வருகின்றனர்.
மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 28 கிராமங்களிலும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / LOGESHWARI V