Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 26 நவம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் அணுகுமுறை வியப்பளிப்பதாகத் தெரிவித்தார்.
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்திலும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களின் நாட்கள் குறைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதே நடைமுறை நாடாளுமன்றத்திலும் தொடர்வதை விரும்பவில்லை என்றார்.
1950-களில் நாடாளுமன்றம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 120 முதல் 170 நாட்கள் வரை கூடியதாகவும், தற்போது அது சுமார் 70 நாட்களாகக் குறைந்துவிட்டதாகவும் சசி தரூர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்டு பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றம் உரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
மேலும், பல வெளிநாடுகளில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களுக்கான கால அட்டவணை 9 முதல் 12 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுவதாகவும், சில நாடுகளில் 13 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனால் உறுப்பினர்கள் தங்களது பணிகளையும் பயணங்களையும் முன்கூட்டியே திட்டமிட முடியும் என்றும், இந்தியாவிலும் இத்தகைய நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்து 115 நாட்களுக்கும் மேலாகியும் அது அதிகாரப்பூர்வமாக நிறைவுபடுத்தப்படவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்தார்.
வழக்கமாகத் தொடங்க வேண்டிய குளிர்காலக் கூட்டத்தொடருக்கான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக மழைக்காலக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட அரசு திட்டமிட்டிருக்கலாம் என்றும், அந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகளுக்குக் கடுமையான ஆட்சேபனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வைப் பாதிக்கக்கூடிய முக்கியமான தேசியப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அவற்றை அவசரமாகவும் அலட்சியமாகவும் கையாளக்கூடாது என்றும் சசி தரூர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V