Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 26 நவம்பர் (ஹி.ச.)
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின், ஏழுமலையானுக்கு இந்த பிரம்மாண்ட காணிக்கையை வழங்கியுள்ளார்.
இதற்கான ஆவணங்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கய்ய சவுத்ரியிடம் அவர் ஒப்படைத்தார்.
இதையடுத்து, தங்க ஆபரணங்கள் இரும்புப் பெட்டிகளில் பாதுகாப்பாக ஏழுமலையான் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்த காணிக்கையில் மொத்தம் 47 வகையான தங்க ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மொத்த எடை 121 கிலோ என்றும், தற்போதைய மதிப்பீட்டின்படி சுமார் ரூ.206 கோடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 120 கிலோ எடையிலான தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டே, அதற்கு இணையான அளவில் 121 கிலோ தங்க நகைகளை வர்தமான் ஜெயின் காணிக்கையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஏற்கனவே கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, அதே ஆண்டு மே 16-ம் தேதி ஒரு மின்சாரப் பேருந்தையும் காணிக்கையாக அளித்திருந்தார்.
தொழிலதிபரான வர்தமான் ஜெயின், தான் தொடங்கிய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்.
பின்னர் அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அவருக்குப் பெருந்தொகை கிடைத்துள்ளது.
தனக்குக் கிடைத்த இந்தச் செல்வம் அனைத்தும் ஏழுமலையானின் அருளால் கிடைத்ததாகக் கருதிய அவர், தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக தற்போது இந்த பிரம்மாண்ட தங்க ஆபரணங்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் வெங்கடேசப் பெருமானுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய காணிக்கைகளில் இது மிகப்பெரியதாக இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / LOGESHWARI V