Enter your Email Address to subscribe to our newsletters

பனாஜி, நவம்பர் 27 (ஹி.ச.)
மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘டெமோகிராஃபி இஸ் டெஸ்டினி’ (Demography Is Destiny) என்ற ஆவணப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்டது.
இந்தியாவின் மக்கள்தொகை விகிதத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நாட்டின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆவணப்படம் ஆராய்கிறது.
புகழ்பெற்ற தொழில்முனைவோரும், ஹிந்துஸ்தான் சமாச்சாரின் இயக்குநருமான ரவீந்திர சாங்வி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
காமாக்யா நாராயண் சிங் மற்றும் அன்ஷுமான் சேகர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்தியாவின் மக்கள்தொகை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தற்போதைய காலம் வரையிலான மக்கள்தொகை மாற்றங்களைப் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.
குறிப்பாக, நீண்டகால மக்கள்தொகை போக்குகள் நாட்டின் தேசிய ஸ்திரத்தன்மை, கலாச்சாரத் தொடர்ச்சி மற்றும் சமூக எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து விவாதிக்கிறது.
மேலும், இந்தியப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுகளுடன் மக்கள்தொகை மாற்றங்களுக்குள்ள தொடர்புகளையும் படம் எடுத்துரைக்கிறது.
குறிப்பிட்ட சமூகங்களின் மக்கள்தொகை விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.
மக்கள்தொகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆவணப்படம் வலியுறுத்துகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் சமநிலை ஏற்படாவிட்டால், இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகலாம் என்றும் படம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆவணப்படத்தின் இணை இயக்குநரான காமாக்யா நாராயண் சிங், 'ஜஸ்டிஸ் டிலேட் பட் டெலிவர்டு' (2020), 'போர்: டான்' (2018), 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' (2026) உள்ளிட்ட படங்களுடன் தொடர்புடையவர்.
மற்றொரு இயக்குநரான அன்ஷுமான் சேகர், மறைந்த மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 'எ ட்ரிப்யூட் டு லேட் ஸ்ரீ மனோகர் பாரிக்கர்' (2019) திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / LOGESHWARI V