மேக்கரை பகுதியில் முகாமிட்ட 9 காட்டு யானைகள் – விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்; கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர்!
தென்காசி, 27 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே ஒரே நேரத்தில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையின
யானை


தென்காசி, 27 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே ஒரே நேரத்தில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் தொடங்கி நடைபெற்று வருவதால், ஏராளமான பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். இதற்கிடையே, வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் இடம்பெயர்ந்து தமிழக – கேரள எல்லையையொட்டிய வனப்பகுதிகளில் முகாமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் மேக்கரை அருகேயுள்ள எருமைச்சாவடி பகுதியில் 9 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு அருகே யானைகள் இருப்பதால், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையினர் அப்பகுதியிலேயே முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மேக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள், பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam