சென்னையில் மழையுடன் போக்குவரத்து நெரிசல் - அலுவலகம், பள்ளிக்குச் சென்றவர்கள் கடும் பாதிப்பு
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் திடீரென பெய்த மழை காரணமாக, ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையான ஓ.எம்.ஆர். பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளி
Traffic


சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் திடீரென பெய்த மழை காரணமாக, ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையான ஓ.எம்.ஆர். பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால், தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென பெய்த மழையால் சாலையில் வாகனங்களின் வேகம் குறைந்தது. அதே நேரத்தில், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குப் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாலைகளில் பயணித்ததால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.

குறிப்பாக, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் கார்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், குறுகிய தூரத்தைக் கடக்கக் கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

ஏற்கனவே காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் ஓ.எம்.ஆர். சாலையில், திடீர் மழையும் சேர்ந்து கொண்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சோழிங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Hindusthan Samachar / LOGESHWARI V