சென்னையில் நீர் பற்றாக்குறையை குறைக்க புதிய திட்டம் – CEEW முக்கிய பரிந்துரைகள்
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.) காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை படுகையில் நீர் வளங்களைப் பாதுகாக்கவும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும் புதிய திட்டமிடல் அவசியம் என எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்ற
Water


சென்னையில் நீர் பற்றாக்குறையை குறைக்க புதிய திட்டம் – CEEW முக்கிய பரிந்துரைகள்

சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை படுகையில் நீர் வளங்களைப் பாதுகாக்கவும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும் புதிய திட்டமிடல் அவசியம் என எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் (CEEW) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ‘தமிழ்நாட்டிற்கான காலநிலை இடர் சார்ந்த நீர் பாதுகாப்புத் திட்டமிடல்’ என்ற தலைப்பில் சென்னையில் அறிவுப் பகிர்வுப் பயிலரங்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற CEEW நிபுணர்கள், சென்னை படுகையில் நிலவும் நீர் அபாயங்கள் மற்றும் பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தனர்.

CEEW திட்டத் தலைவர் ஏகான்ஷா கண்டுஜா தனது ஆய்வுப் பகிர்வில், இந்தியாவின் 15 முக்கிய நதிப் படுகைகளில் 11 படுகைகள் ஏற்கனவே நீர் அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்கால நீர் பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சென்னையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் துணைப் படுகைகள் மிக அதிகமான காலநிலை அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் கோவளம், அடையாறு, ஆரணியாறு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, சென்னை நதிப் படுகையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நீர் வளம் தொடர்பான அபாயங்களை மதிப்பிட்டுள்ளது.

மேலும், ஆறு விதமான கொள்கைச் சூழல்களின் அடிப்படையில் எதிர்கால நீர் தேவை மற்றும் விநியோக நிலவரங்களும் கணிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் அடிப்படையில், உள்ளூர் அளவில் நீர் இருப்பு மற்றும் அபாய மதிப்பீடுகளை மேற்கொள்வது, அரசு நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது, நீர் தொடர்பான தரவுகளை வலுப்படுத்துவது, அதிக அபாயம் உள்ள துணைப் படுகைகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட நான்கு முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நுண்பாசன முறைகளை விரிவுபடுத்துவதும், சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்துவதும் நீர் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் 13 சதவீதம் வரை நுண்பாசனத்தை விரிவுபடுத்தி, 25 சதவீத நிலத்தடி நீர் மறுபயன்பாட்டை எட்டினால், 2050-ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படாத நீர் தேவையை சுமார் 52 சதவீதம் குறைக்க முடியும்.

மறுபயன்பாட்டை 40 சதவீதமாக உயர்த்தினால் இந்தக் குறைப்பு சுமார் 63 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஏகான்ஷா கண்டுஜா, நீர் வளங்கள் இயற்கையான நீரியல் அமைப்புகளின் அடிப்படையில் செயல்படுகின்றன.

எனவே, அவற்றைப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் அந்தந்த நீரியல் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், பயன்படுத்தப்பட்ட நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நகரங்களின் நீர் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என CEEW ஆய்வாளர் டாக்டர் நிதின் பாஸி தெரிவித்தார்.

இதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நீண்டகாலத் திட்டங்கள், முறையான நிதி ஆதாரங்கள் மற்றும் நிலையான கட்டண முறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V