மக்களவைத் தொகுதிகளை 25 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது: காங்கிரஸ் அதிரடி கோரிக்கை
புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.) நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையில் அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மத்திய அரசு தவறான வழியில் த
Jairam ramesh


புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.)

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையில் அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மத்திய அரசு தவறான வழியில் திரட்ட முயற்சிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இவ்விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் மூலம் மக்களவையில் அரசியல் ரீதியாகப் பெரும்பான்மையை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வகையில் காங்கிரஸ் முழு பலத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மக்களவையின் தற்போதைய மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றித் தொடர வேண்டும் என்பது காங்கிரஸின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது வழங்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துடன் இணைக்காமல், 2029 மக்களவைத் தேர்தல் முதலே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இடஒதுக்கீட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கும் உரிய உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மகளிர் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதுடன், மாநிலங்களின் தற்போதைய தொகுதிப் பங்கீட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் முன்வைக்கும் நிலைப்பாடாக உள்ளது.

இந்த விவகாரங்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே முக்கிய விவாதப் பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V