திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு செல்ல புதிய திட்டம்: காசி தமிழ் சங்கமத்தில் அறிமுகம்
வாரணாசி, 27 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாசாரம், மொழி மற்றும் கல்வி சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 5-வது காசி தமிழ் சங்கமம் நவம்பர் 28-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்குகிறது. டிசம்பர் 12-
Kasi tamil sangam


வாரணாசி, 27 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாசாரம், மொழி மற்றும் கல்வி சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 5-வது காசி தமிழ் சங்கமம் நவம்பர் 28-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்குகிறது.

டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1,400 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய கருப்பொருளாக, 'திருக்குறள் பயில்வோம் - Thirukkural Abhyas Karen' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொன்மையான இலக்கியப் பெருமையை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கல்வி பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் பல்மொழிக் கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களை இணைக்கும் திருக்குறள் கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு திருக்குறள் தொடர்பான அறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் ஒரு மாணவர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 22 அட்டவணை மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலம் திருக்குறள் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும். இதற்கான பல்மொழி கற்றல் வளங்களை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) வழங்க உள்ளது.

திட்டத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியான மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 4 முதல் 10 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை அல்லது குறிப்பைத் தயாரிக்க வேண்டும்.

தங்களது கல்வி நிறுவனங்களில் திருக்குறள் குறித்து ஒரு மணி நேரம் உரையாற்றவும் வேண்டும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடமும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த திருக்குறள் அறிஞர்கள் வாரணாசி கல்வி நிறுவனங்களில் அறிமுக வகுப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் ராஷ்டிரிய இ-புஸ்தகாலயா இணைந்து பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு, கதை சொல்லுதல் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன.

தமிழகத்திலிருந்து வரும் 1,400 பேர் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் என ஏழு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் இடம்பெறுகின்றனர்.

இவர்களுக்கான பயணத் திட்டத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன.

அங்குள்ள முக்கியமான ஆன்மிகம், வரலாறு மற்றும் கலாசாரச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடுவதுடன் கல்வி சார்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பாரதிய பாஷா சமிதியுடன் இணைந்து திருக்குறள் குறித்த தேசிய மாநாட்டை நடத்த உள்ளது.

மேலும், திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட அனிமேஷன் வீடியோக்கள், குறும்படங்கள், ஒலிப்புத்தகங்கள் மற்றும் பல்மொழி டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி சென்னை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம், தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகளைப் புதுப்பிக்கும் முக்கிய நிகழ்வாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V