8 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை – பெல் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, 27 நவம்பர் (ஹி.ச.) ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே, பெல் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 300 பேர் பங்கேற்று, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Employed


ராணிப்பேட்டை, 27 நவம்பர் (ஹி.ச.)

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே, பெல் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 300 பேர் பங்கேற்று, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் எஸ். வசந்தகுமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ம. சுந்தரம், செயல் தலைவர் கோவிந்தசாமி, ஆலோசகர்கள் வேலு, பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதாகத் தெரிவித்தனர். குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு மற்றும் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான ஊதிய உச்சவரம்பை உயர்த்த வேண்டும், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்வு காணப்படாமல் உள்ள ஊதிய உயர்வு பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, பெல் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஊதிய உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V