6 முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகப் புகார்: ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.) சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரைச் சேர்ந்த ஜூடி ஜெயந்தி பாண்டி, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்த இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார்
Police station


சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரைச் சேர்ந்த ஜூடி ஜெயந்தி பாண்டி, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்த இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை எஸ்பிளனேடு பகுதியைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும், ஜூடி ஜெயந்தியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் பாண்டி உறுதியளித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஜூடி தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி தனது வீட்டிற்கு வந்து தங்கிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மின்வாரியத்தில் உயர் பதவியில் இருப்பதால் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்றும், ஓய்வுபெற்ற பிறகு இருவரும் இணைந்து வாழலாம் என்றும் பாண்டி கூறியதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாண்டிக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தன்னுடன் குடும்பம் நடத்திய காலத்தில் ஆறு முறை கர்ப்பமானதாகவும், ஒவ்வொரு முறையும் குழந்தை வேண்டாம் எனக் கூறி கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதால் அதனைச் செய்துகொள்ள நேரிட்டதாகவும் ஜூடி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக குன்றத்தூர் மற்றும் திருமுடிவாக்கம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் பாண்டி மீது குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது வழக்கு சங்கர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு நபர்கள் மூலம் மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி, புகாரில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூடி ஜெயந்தி பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V