Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கொளத்தூர் அடித்த
ரெட்டையேரி பகுதியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. பயணிகளுக்குப் பல்வேறு நவீன வசதிகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நிழற்குடையை, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பயணிகள் அமர்வதற்குத் தங்க நிறத்திலான இருக்கைகள், மின்விசிறிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்ததால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு இந்த நிழற்குடை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் சேதம் ஏற்பட்டு, அதன் ஒரு பகுதி பெயர்ந்து கீழே தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த நிலை நீடித்தும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேற்கூரையின் சேதமடைந்த பகுதி எப்போது வேண்டுமானாலும் முழுமையாகக் கீழே விழக்கூடும் என்பதால், நிழற்குடைக்குள் அமர்ந்து பேருந்துக்காகக் காத்திருக்கவே பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, தினசரி இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த மேற்கூரையை உடனடியாக அகற்றிச் சீரமைக்க வேண்டும். அதுவரை ஆபத்தான பகுதியைச் சுற்றிப் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்து ரெட்டையேரி பேருந்து நிறுத்தத்தைப் பாதுகாப்பான பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V