Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 27 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கை அருகே அமைந்துள்ள சோழபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது. கிராமத்தில் உள்ள கண்மாய்களை நம்பி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது வயல்களில் உழவுப் பணிகளை மேற்கொண்டு நெல் நடவு செய்தனர்.
இதற்காக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் வயல்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு கால்வாய் மூலம் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சில ஆண்டுகளாக அந்தக் கால்வாய் வழியாகo
த் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் ஓரளவு வளர்ந்துள்ள நிலையில், அவற்றைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்மாய்களில் எஞ்சியுள்ள குறைந்த அளவு தண்ணீர்கூட வயல்களுக்கு முறையாகச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாய்க்காலில் தேங்கியிருக்கும் நீரை இறவைப் பலகைகள் மூலம் கைகளால் இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றனர்.
இருப்பினும், பயிர்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெய்யும் மழையைப் பொறுத்தே எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், மழை பெய்யாவிட்டால் இந்த ஆண்டும் விவசாயம் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயத்திற்காக ஏற்கெனவே பெரும் தொகையைச் செலவிட்டுள்ள நிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போதைய நிலையை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும் அரசு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V