Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 27 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ராசுக்குட்டி (50), காஞ்சிரங்காலைச் சேர்ந்த ஜோதிஅம்மாள் (60) ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக சிவகங்கை அவ்வையார் தெருவில் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக இணைந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் இவர்களது வீடு திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாலையில் ஜோதிஅம்மாளின் உறவினர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் சென்ற அவர், ஜோதிஅம்மாள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், அருகிலேயே ராசுக்குட்டி குடிபோதையில் அவரைக் கட்டிப்பிடித்தபடி படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீசார், ஜோதிஅம்மாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜோதிஅம்மாளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் இயற்கையான முறையில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டிற்குள் என்ன நடந்தது, ராசுக்குட்டிக்கு இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரியுமா என்பது உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தற்போது ஜோதிஅம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்தச் சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V