தமிழகத்தில் தொடரும் கனமழை! அந்தமான் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளத
Rain


சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் நவம்பர் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகக்கூடும்.

தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது.

மேலும், டிசம்பர் 2ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, குமரிக்கடல் பகுதியில் இருந்து தமிழகம், கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய சாதகமான சூழல் நிலவுகிறது.

இன்று தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இடி, மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும்.

ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V