Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 27 நவம்பர் (ஹி.ச.)
திருவாரூரில் இருந்து தேவூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் திருவாரூர் அருகே உள்ள கானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ஐந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் விஜயலட்சுமி, சசிகலா, மரகதம், மணிகண்டன், வசந்தா, சரவணன், கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கானூர் சோதனைச் சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V