5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் -சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜின
Madras high court


சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதற்கிடையே இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக பல தொகுதிகள் காலியான நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஏற்கனவே இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது எனக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 10ஆம் தேதி மேற்கண்ட 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தனது எழுத்துப்பூர்வ வாதத்தில், இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பது நிரந்தர முடிவு அல்ல என்றும், நீதிமன்ற வழக்கு முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும், இடைத்தேர்தல் நடத்துவதற்கு சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் இருப்பதாகவும் விளக்கம் அளித்தது.

மறுபுறம், முதல்வர் விஜய் தரப்பில் இடைத்தேர்தலை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், விரைவாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. தற்போது இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V