Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)
சென்னை பிரெஸ்ட் சென்டர் (CBC) மற்றும் ஷரணா மார்பகப் புற்றுநோய் நிவாரண மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 பேர் பங்கேற்றனர்.
மார்பகப் புற்றுநோயால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்கள் ஒரே இடத்தில் சந்தித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் தொடர்பான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
மேலும், மருத்துவ நிபுணர்களின் உரைகள், இசை நிகழ்ச்சிகள், மூளைப் பயிற்சிகள், உடலியக்கப் பயிற்சிகள், யோக நித்ரா மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கும் அதிலிருந்து மீண்டவர்களுக்கும் வலுவான ஆதரவு வலையமைப்பை உருவாக்குவதே தங்களது முக்கிய நோக்கம் என்றார்.
சிகிச்சையின் வெவ்வேறு நிலைகளில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனவலிமை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆன்லைன் வழியாக ஆதரவுக் குழுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டாலும், நேரில் சந்தித்து நட்பையும் உறவுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்கு ‘எங்கள் உத்சவ்’ சிறந்த வாய்ப்பாக அமைவதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கே. அண்ணாமலை, மக்களின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கும் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றார்.
அரசியல் என்பது மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஏரிகள், குளங்கள் மற்றும் நதிகளைப் பாதுகாப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற மக்கள் நலப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
தங்களது அமைப்பின் சார்பில் இதுவரை 13.5 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், 50 லட்சம் மரங்கள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை, கடன் சுமை மற்றும் ஜிஎஸ்டி வருவாய் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டி, தற்போதைய சூழலில் மாற்றங்கள் அவசியம் என்றார்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அண்ணாமலை, தங்களது பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.
குறிப்பாக, அரசு இடங்களைத் தூய்மைப்படுத்தி நடைபாதைகள் அமைத்துக் கொடுப்பது போன்ற மக்கள் நலப் பணிகளைச் செய்ய வேண்டும் என வேட்பாளர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து பணிகளின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / LOGESHWARI V