Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல், திமுக அரசியல் விமர்சனத்துடன் மட்டும் முடித்துக்கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டை 'நீதித்துறை பயங்கரவாதம்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மலையை ஒப்படைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, நீதிமன்றத்தின் அதிகார மேலாதிக்கப் போக்கா எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளைப் பேசும் திமுக, இந்த விவகாரத்தில் தனது வரலாற்றை மறந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள வன்னி அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நேரடியாக விமர்சிக்காமல், தவெக அரசின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன என்று மட்டுமே திமுக கேள்வி எழுப்பியதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற பண்பாட்டைக் காக்கும் வகையில் தவெக அரசு செயல்பட்டதாகவும், ஆனால் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து மதுரையில் மத்திய ராணுவத்தை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் திமுக தலைமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சிக்காமல், தவெக அரசின் தோல்வியாக மட்டுமே சித்தரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும் திமுக இதேபோன்ற சமரச நிலைப்பாட்டையே எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாகவும் திருமாவளவன் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் ராமர் பாலம் குறித்த நம்பிக்கைகளை எதிர்த்து கலைஞர் கருணாநிதியும், திருமாவளவனும் முன்வைத்த கருத்துகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வடமாநிலங்களின் ஆதிக்கத்துக்கு தென்மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களை உட்படுத்தும் வகையிலான நடவடிக்கையை திமுக ஆதரிப்பதாகவும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் மூலம் பாஜகவின் வஞ்சக வலைக்குள் திமுக விரும்பியே சிக்கிக்கொண்டதை இந்தப் போக்கு காட்டுவதாகவும் வன்னி அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P