Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் திமுகவின் செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆ.ராசா, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா குறித்து கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.
அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆழமாக ஆலோசித்து, நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் எது நல்லது என்பதை கருத்தில் கொண்டு திமுக முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் இருந்து 50 சதவீதம் கூடுதலாக இடங்களை வழங்கும் முன்மொழிவுக்கு திமுக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இந்த முடிவு புதிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும், ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.
மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக ஒரே நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார்.
1971-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுவரையறையின்போது தமிழ்நாட்டிற்கு இரண்டு மக்களவைத் தொகுதிகள் குறைந்ததாகக் குறிப்பிட்ட ஆ.ராசா, தற்போது அத்தகைய இழப்பு ஏற்படவில்லை என்றார்.
மாறாக, 7.18 என்ற அளவிலிருந்து 7.21 என்ற அளவிற்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு நட்டம் இல்லை என்றும் கூறினார்.
மசோதாவில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவை குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விவாதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து அந்தப் பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.
மேலும், சட்ட வல்லுநர்கள் மற்றும் பிற கட்சிகளின் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசி, தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முழு அதிகாரத்தையும் திமுக உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை திமுக உறுதியாக எதிர்க்கும் என்றும் ஆ.ராசா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் இருந்த அதே நிலைப்பாட்டில்தான் திமுக தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் நியாயமான தொகுதி மறுவரையறையை திமுக வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V