Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி , 28 நவம்பர் (H.S.)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பைத் தொடங்கி வைப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வாரணாசி வந்தடைந்தார்.
விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேயர் அசோக் திவாரி, மக்கள் பிரதிநிதிகள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அவரது வாகன அணிவகுப்பு விமான நிலையத்திலிருந்து நகருக்குப் புறப்பட்டது.
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெறும் விழாவில் காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.
தமிழின் தொன்மையான இலக்கியப் படைப்பான திருக்குறளின் கருத்துகளையும் போதனைகளையும் பரப்புவதை மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஏழு குழுக்களாகப் பிரதிநிதிகள் வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 250 பேர் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவினர் ஏற்கனவே சிறப்பு ரயில் மூலம் வாரணாசியைச் சென்றடைந்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் மற்ற குழுக்களும் வருகை தர உள்ளன.
திருக்குறளின் சிறப்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி தெரிந்த 50 ஆசிரியர்கள் உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தர உள்ளனர்.
இவர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு திருக்குறளின் அறக்கருத்துகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுமார் 1,000 கல்வி நிறுவனங்களில் இருந்து தலா ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு, அவரவர் தாய்மொழியில் திருக்குறளைப் படித்து அதன் கருத்துகளைப் பிற மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காசி தமிழ் சங்கமத்தின் கல்வி நிகழ்வுகளுக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி-பிஎச்யூ ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 11 வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு கல்வி அமர்வுகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல், விவாதம் மற்றும் அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து செல்லும் விருந்தினர்களுக்காக இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, உப்புமா, ரசம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தயாரிப்பதற்கான சமையல்கலைஞர்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட உள்ளன.
மேலும், சங்கமத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள் வாரணாசியின் முக்கிய ஆன்மிக மற்றும் கலாச்சார இடங்களையும், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களையும் பார்வையிட உள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V