Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 28 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அரசு சார்ந்த கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுமக்களுக்கு பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
பொதுமக்கள் அரசு சார்ந்த உதவிகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு அலைந்து சிரமப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அவரவர் பகுதிகளிலேயே இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை முழுமையாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு வாடகைக் கார் மூலம் செயல்படுவதாக விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கூட்டம் மற்றும் சத்தம் காரணமாக அவ்வாறு கூறப்படுகிறதா என்பது குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டதுடன், வேண்டுமானால் சொந்தமாக ஒரு கார் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.
குன்னத்தூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Hindusthan Samachar / LOGESHWARI V