Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வதற்காக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனால் மலை அடிவாரப் பகுதியில் காலை முதலே மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகத் திரண்டுள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகக் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, காலை 6.15 மணிக்குப் பிறகு மலைக்குச் செல்ல வந்தவர்களை காவல்துறையினர் வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்தனர்.
தொடர்ந்து, ஒவ்வொருவரிடமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே மலைப்பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மலைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்காகத் தீபத்தூணைச் சுற்றி மேடை அமைக்கும் பணிக்குத் தேவையான பொருட்கள் மலைப்பாதை வழியாக மேலே எடுத்துச் செல்லப்படுகின்றன.
மூங்கில் கம்புகள், மரப்பலகைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
தீபத்தூணைச் சுற்றி தேவையான மேடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஒருபுறம் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்க வருபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளும், மறுபுறம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / LOGESHWARI V