திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றம்- மலையில் ஒளிர்ந்த தீபச்சுடர்!
மதுரை, 28 நவம்பர் (ஹி.ச.) மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் மாலை 5 மணிக்கு புனி
Deepam


மதுரை, 28 நவம்பர் (ஹி.ச.)

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் மாலை 5 மணிக்கு புனித தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆன்மிக உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மூத்த காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட 50 பக்தர்கள் பங்கேற்றனர்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பாரம்பரிய சமய நடைமுறைகளைப் பின்பற்றி தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபத்தின் ஒளி சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பரவியது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்தத் தீப ஒளியைக் கண்டு வழிபட்டனர்.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நடைபெற்ற இந்த நிகழ்வு பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

கார்த்திகை மாதத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்தத் தீபத் திருவிழாவில், முருகப்பெருமானை போற்றும் பக்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ஆன்மிகப் பேரொளியுடன் விழாக்கோலம் பூண்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி ஸ்ரீ சங்கர நாராயண பீடத்தின் ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தர்மம் தனது கடமையை உரிய நேரத்தில் நிறைவேற்றும் என்றார்.

மேலும், நீதித்துறை வழங்கிய தீர்ப்பும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தார்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி, தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு அவரது அருளையும் ஆசியையும் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / LOGESHWARI V