Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 29 நவம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி பெய்த கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் (NH-181) பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையே இரு மார்க்கங்களிலும் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலை மாற்றுப்பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மாற்றுப்பாதை குறுகலாகவும், பல கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்டதாகவும் உள்ளது.
இதனால் கனரக வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்பதால், இரு திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இதன்படி, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் உயர் தளப் பேருந்துகள் இரு மார்க்கங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டுமே இவ்வகை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
தடை நேரத்தில் வரும் கனரக வாகனங்கள் காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அறிவிக்கும் நிறுத்துமிடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.
கார்கள், ஜீப்புகள், வேன்கள் மற்றும் சிறிய பேருந்துகள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எரிபொருள், எரிவாயு, பால், அழுகும் பொருட்கள் மற்றும் மருந்துகள் எடுத்துச் செல்லும் வாகனங்களும், அத்தியாவசிய அரசுப் பணிகளுக்கான வாகனங்களும் உரிய அனுமதிச் சீட்டுடன் பயணிக்கலாம்.
இந்தப் புதிய போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பர்லியார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும்.
அரசின் உத்தரவை மீறி வாகனங்களை இயக்குவோர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 177 உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் லாரி உரிமையாளர்கள், பேருந்து இயக்குநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V