தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு தவெக ஆதரவு அளிக்க வேண்டும் – பாஜக ராம் மாதவ் வலியுறுத்தல்!
சென்னை, 29 நவம்பர் (ஹி.ச.) சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலப் பொறுப்பாளர் ராம் மாதவ், தமிழகத்தில் முருகப்பெருமானின் பக்தர்களுக்கான வழிபாட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்க
Ram madhav


சென்னை, 29 நவம்பர் (ஹி.ச.)

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலப் பொறுப்பாளர் ராம் மாதவ், தமிழகத்தில் முருகப்பெருமானின் பக்தர்களுக்கான வழிபாட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பிரச்சாரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்துப் பேசிய அவர், அங்கு தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது முருக பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' எனப் பதிவிட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது வாழ்த்தைப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை தயக்கம் காட்டப்பட்டது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை எவ்வாறு மீற முடியும் என்றும் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார்.

உண்மையான மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சமமாக மதிப்பதே எனக் குறிப்பிட்ட ராம் மாதவ், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட பாஜக தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை மற்றும் பிரதிநிதித்துவத் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறினார்.

இதன் அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த அவர், தமிழகத்தின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தொகுதி மறுவரையறைக்காக அமைக்கப்படும் ஆணையம் தனது பரிந்துரைகளைப் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு வைக்கும் என்றும் விளக்கினார்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த இரு மசோதாக்களையும் ஆய்வு செய்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தமிழக வெற்றிக் கழகமும் திறந்த மனதுடன் இவற்றைப் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது தவறான முடிவு என்றும், இது அக்கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விமர்சித்தார்.

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தவெக சுயமாகச் செயல்பட்டு இரண்டு மசோதாக்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாரைச் சந்திக்கச் சிலர் செல்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராம் மாதவ், இத்தனை ஆண்டுகளாக அவரது உடல்நலம் குறித்து அக்கறை காட்டாதவர்கள் தற்போது திடீரென அக்கறை செலுத்துவது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V