Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 29 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
பண்டிகைக் காலங்களில் சிலர் கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, துணிகள் மற்றும் பல்வேறு பொருட்களைத் தற்காலிகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் முறையாகக் கடை நடத்தி வரும் உள்ளூர் வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்படுவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.
குறிப்பாக, பழைய சரக்குகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் நிரந்தரக் கடை வைத்திருக்கும் வணிகர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதுபோன்ற தற்காலிக விற்பனைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் இதுபோன்ற விற்பனைகளைக் கண்காணித்து, உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஹோட்டல்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே வணிகர்கள் குப்பை வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளைச் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கூடுதலாகக் குப்பை அகற்றும் கட்டணம் வசூலிப்பது வணிகர்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்றும், இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கெனவே மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.
மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
வணிகர்கள் எதிர்கொள்ளும் தொடர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்திய விக்கிரமராஜா,
குறிப்பாகச் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கெனத் தனிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V