தி.மு.க ஆதரவு காங்கிரஸ் எதிர்ப்பு- 850 தொகுதிகளாக உயர்கிறதா மக்களவை? -இன்று முக்கிய ஆலோசனை
புதுடெல்லி, 29 நவம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 132ஆவது திருத்த மசோதா 2026க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543ல் இர
Parliament


புதுடெல்லி, 29 நவம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 132ஆவது திருத்த மசோதா 2026க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆகவும், மாநில சட்டப்பேரவைகளின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கையை 650 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைவிட 50 சதவீதம் கூடுதல் இடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு விகிதத்தை 2051ஆம் ஆண்டு வரை பாதுகாக்கும் அம்சமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தற்போதுள்ள 543 இடங்களுக்குள்ளேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, புதிய மசோதாவில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறி திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொகுதி மறுவரையறையை முன்வைத்து நாட்டின் தேர்தல் கட்டமைப்பை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில், தொகுதி மறுவரையறை நடவடிக்கை வெளிப்படையாகவும் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மத்திய அரசின் மசோதாவை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

நாளை நவம்பர் 30ஆம் தேதி மக்களவை மீண்டும் கூடுகிறது. டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவை கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் 132ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற இரு அவைகளிலும் பங்கேற்று வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. எனவே, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் முக்கியமான அரசியல் போட்டி உருவாகியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதா அல்லது தொகுதி மறுவரையறை தொடர்பான அம்சங்களைத் தனியாகப் பரிசீலிப்பதா என்ற விவாதமே தற்போது தேசிய அரசியலின் மையமாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V