Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, கடந்த 2012-ல் லோக் சத்தா கட்சி நிர்வாகியாக இருந்த ஜெகதீஸ்வரன், 2015-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2023-ல் அதிமுக கொறடாவாக இருந்த எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுக்களில், சட்டமன்றத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நடைபெறும் விவாதங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
மேலும், சட்டமன்ற நிகழ்வுகள் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே ஊடகங்களுக்கு வழங்கப்படுவதால், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் நடைபெறும் விவாதங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, சட்டமன்ற நிகழ்வுகள் தற்போது முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதாக சட்டமன்ற செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேரடி ஒளிபரப்பு கோரிய வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P