Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.)
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 63 வயதான தாட்சாயினி மற்றும் அவரது கணவர் ரங்கநாதன் (70) ஆகியோர், ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்குச் சொந்தமான வாரிசுரிமைப் பங்குகளைப் பெறாமல், குடும்பத்தினரின் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தாட்சாயினி கூறுகையில்,
தனது தந்தை பொன்னப்பிள்ளை மற்றும் தாய் ஜீவம்மாள் ஆகியோருக்குச் சொந்தமாக ஆவடி வட்டம், பால்வேடு கிராமத்தில் 3.8 ஏக்கர் நிலம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலத்தைத் தனது உடன்பிறந்தவர்களான குப்பம்மாள், ரங்கநாதன், வெங்கடேசன் ஆகியோர் முறைகேடாகப் பதிவு செய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், தந்தையின் வாரிசுகளான தனக்கும், தனது சகோதரி மாரியம்மாளுக்கும் உரிய பங்குகளை வழங்காமல், அவர்களிடம் கையெழுத்து பெறாமலேயே மொத்த நிலத்தையும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.
தனது தந்தையின் வாரிசுச் சான்றிதழில் தன்னுடைய பெயரும், சகோதரி மாரியம்மாளின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில், இருவரின் ஒப்புதலும் இல்லாமல் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வாரிசுதாரர்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ள நிலையில், சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள 3.8 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ய சார்பதிவாளர் உதவியதாகவும் தாட்சாயினி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளரிடம் விளக்கம் கேட்டு தம்பதியினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது பதிலளித்த சார்பதிவாளர், சம்பந்தப்பட்ட பத்திரத்தைத் தான் பதிவு செய்யவில்லை என்றும், புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளர்கள் நியமிக்கப்படாததால், வெவ்வேறு அதிகாரிகள் மாறி மாறிப் பணியாற்றி வருவதாகப் புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சீனிவாச ராவ் என்பவர் பணியில் இருந்தபோதுதான் சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு நடைபெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பதிவாளரிடம் கேட்டபோது, ஐந்து வாரிசுதாரர்கள் இருக்கும் நிலையில் மூன்று பேரை மட்டும் வைத்து பத்திரப்பதிவு செய்திருந்தால் அது தவறு எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார், ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V