Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 03 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் நடைபெற்ற இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், மாநிலத்தின் பசுமை எரிசக்தி வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது ஒரு நாள் டெல்லி பயணம் குறித்து அவர் கூறுகையில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'India Renewable Energy Summit and Expo 2026' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
மாநிலத்தின் மொத்த எரிசக்தி நுகர்வில் 15 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகப் பெறும் இலக்குடன் தங்களது அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
இதில் பிரதமரின் சூரிய வீடு திட்டம் (PM Surya Ghar Yojana) சிறப்பான முன்னெடுப்பாக உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள கைரா கிராம மக்கள் அனைவரும் சூரிய மின்சக்தி திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பசுமை எரிசக்தித் துறையில் சுமார் ரூ.1.33 லட்சம் கோடி முதலீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுமட்டுமின்றி, சத்தீஸ்கர் மாநிலத்தின் எரிசக்தித் துறையில் ரூ.5.60 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான பணிகளும் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
இந்த முதலீடுகள் மாநிலத்தில் பசுமை எரிசக்தி உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
நக்சல் இல்லாத பஸ்தார் பகுதிக்கான இழப்பீடு தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதற்கு காங்கிரஸுக்கு எந்த உரிமையும் இல்லை என்று விமர்சித்தார்.
நக்சலிச அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் முந்தைய காங்கிரஸ் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. அப்போதைய அரசின் ஒத்துழைப்பற்ற அணுகுமுறையே சத்தீஸ்கரில் நக்சலிசம் நீண்டகாலமாக வேரூன்றியிருக்க முக்கியக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V