முன்னாள் படைவீரர் மகளுக்கு திருமண நிதியுதவி - அமைச்சர் சரத்குமார் வழங்கினார்
சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.) சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்களின் மகள் மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இளம் வயதை
Sarath


சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.)

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்களின் மகள் மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இளம் வயதையும், வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தையும் அர்ப்பணித்த முன்னாள் படைவீரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய், முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவியை உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, முன்னாள் படைவீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண மானிய நிதியுதவி தலா ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிவாரண நிதியுதவி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2026–2027ஆம் நிதியாண்டிற்கான தமிழக சட்டமன்றப் பேரவையின் பொதுத்துறை மானியக் கோரிக்கையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.4 ஆயிரம் நிதியுதவி ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில், நவம்பர் 3ஆம் தேதியான இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஒரு முன்னாள் படைவீரரின் மகளுக்கு திருமண மானியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும், 5 மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாதாந்திர நிவாரண நிதியாக தலா ரூ.7 ஆயிரமும், மற்ற 5 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக தலா ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட்டன.

மொத்தம் 11 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட நிதியுதவியை மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார் நேரடியாக வழங்கினார்.

இதன் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசின் நலத்திட்ட அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V